௨
எபேசு சபைக்கு இயேசுவின் நிருபம்
௧ “எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டு ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவர் உனக்கு இதனைக் கூறுகின்றார்.
௨ “நீ என்ன செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ கடினமாக வேலை செய்கிறாய். உன் செயல்களை நீ விட்டுவிடுவதில்லை. கெட்ட மக்களை நீ ஏற்றுக்கொள்வதில்லை என்று எனக்குத் தெரியும். உண்மையில் அப்போஸ்தலர்கள் இல்லாமல் வெளியே தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லித் திரிபவர்களை நீ சோதனை செய்திருக்கிறாய். அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறாய். ௩ நீ விலகிப் போகாமல், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறாய். நீ என் நிமித்தம் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறாய். நீ இவற்றைச் செய்வதில் சோர்வு இல்லாமலும் இருக்கிறாய்.
௪ “ஆனால் சில காரியங்களில் உன்மேல் எனக்குக் குறை உண்டு. நீ துவக்க காலத்தில் கொண்டிருந்த அன்பை இப்போது விட்டு விட்டாய். ௫ எனவே விழுவதற்கு முன்பு எங்கிருந்தாய் என்பதை நினைத்துப்பார். உன் மனதை மாற்றிக்கொள். துவக்க காலத்தில் செய்தவைகளை தொடர்ந்து செய். நீ மாறாவிட்டால் நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அதனிடத்தில் இருந்து நீக்கிவிடுவேன். ௬ ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப்போலவே நீ நிக்கொலாய்கள்* நிக்கொலாய் தவறான கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு மதக்குழு. செய்வதை வெறுக்கிறாய்.
௭ “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். வெற்றி பெறுகிறவனுக்கு தேவனுடைய தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிடும் உரிமையை நான் கொடுப்பேன்.”
சிமிர்னா சபைக்கு இயேசுவின் நிருபம்
௮ “சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“துவக்கமும், முடிவுமாயிருப்பவர் இவைகளை உனக்குக் கூறுகின்றார். அவர்தான் இறந்து, மரணத்தில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்தவர்.
௯ “உங்கள் துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் நீங்கள் செல்வந்தர்கள். தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர். ௧௦ உங்களுக்கு நிகழ்வதைக் குறித்து அச்சப்படவேண்டாம். பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் போடுவான். அவன் உங்களைச் சோதிப்பதற்காகவே அவ்வாறு செய்கிறான். நீங்கள் பத்து நாட்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் இறக்க வேண்டியதாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருங்கள். நீ இறுதிவரை உண்மையாயிருந்தால் ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.
௧௧ “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவன் இரண்டாவது மரணத்தினால் பாதிக்கப்படமாட்டான்.”
பெர்கமு சபைக்கு இயேசுவின் நிருபம்
௧௨ “பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார்.
௧௩ “நீ எங்கே வாழ்கிறாய் என்று எனக்குத் தெரியும். சாத்தானுடைய சிம்மாசனம் இருக்கிற இடத்தில் நீ இருக்கிறாய். ஆனால் நீ எனக்கு உண்மையானவனாக இருக்கிறாய். அந்திப்பாசின் காலத்திலும் என்மீதுள்ள உன்Ԕ விசுவாசத்தை நீ மறுத்ததில்லை. அந்திப்பா எனது உண்மையுள்ள சாட்சி. அவன் உங்கள் நகரத்தில் கொல்லப்பட்டான். உங்கள் நகரம் சாத்தான் வாழுமிடம்.
௧௪ “ஆனாலும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உண்டு. உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் பிலேயாமின் உபதேசத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிலேயாம் இஸ்ரவேலைப் பாவத்துக்கு வழி நடத்த பாலாக் என்பவனால் பலவந்தப்படுத்தப்பட்டவனாவான். இதனால் அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்டு, பாலியல் பாவங்களும் செய்தனர். ௧௫ இதுபோலவே உங்கள் கூட்டத்தில் நிக்கொலாய் மதத்தவர்களின் போதகத்தைப் பின்பற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். ௧௬ எனவே உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மாறாவிட்டால் நான் விரைவில் உங்களிடம் வருவேன். என் வாயின் வாளால் அவர்களோடு போரிடுவேன்.
௧௭ “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்கவேண்டும்!
“ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பேன்.† மன்னா பரலோகத்திலுள்ள உணவு. தேவன் தன் மக்கள் வனாந்தரத்திலிருக்கும்போது கொடுத்தது. அதோடு அவனுக்கு வெள்ளைக் கல்லையும் கொடுப்பேன். அக்கல்லில் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். ஒருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது. அக்கல்லை எவன் பெறுகிறானோ அவன் ஒருவனே அந்தப் புதிய பெயரை அறிந்துகொள்வான்.”
தியத்தீரா சபைக்கு இயேசுவின் நிருபம்
“தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
௧௮ “தேவனின் குமாரன் இவற்றைக் கூறுகிறார். அவர் ஒருவரே அக்கினிபோல ஒளிவிடும் கண்களையும், பிரகாசமான வெண்கலம் போன்ற ஒளி தரும் பாதங்களையும் கொண்டவர். அவர் உனக்குச் சொல்வது இது தான்.
௧௯ “நீ செய்கின்றவற்றை நான் அறிவேன். நான் உன் அன்பையும், விசுவாசத்தையும், சேவையையும், பொறுமையையும் அறிவேன். துவக்கக்காலத்தை விட இப்போது நீ அதிகமாகச் செய்வதையும் நான் அறிவேன். ௨௦ எனினும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உள்ளன. ஏசபேல் என்னும் பெண்ணுக்குத் தனது விருப்பம்போல வாழ நீ இடம் கொடுக்கிறாய். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்கிறாள். அவள் தன் உபதேசத்தால் என் மக்களை என்னைவிட்டுத் தூரமாக்குகின்றாள். அவளால் அவர்கள் பாலியல் பாவங்களைச் செய்கிறார்கள். மற்றும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்கிறார்கள். ௨௧ அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளவும், தன் பாவங்களில் இருந்து விலகவும் நான் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவள் மாற விரும்பவில்லை.
௨௨ “எனவே அவளையும், அவளோடு பாவம் செய்தவர்களையும் நான் அவளுடைய படுக்கையில் எறிந்து அவர்களை மிகவும் வருந்தச் செய்வேன். அவளுடைய செய்கைகளிலிருந்து அவர்கள் மாறாவிட்டால். ௨௩ நான் இப்பொழுதே இதனை நிகழ்த்துவேன். அவளைப் பின்பற்றுகிறவர்களையும் நான் கொல்லுவேன். அப்பொழுது எல்லாச் சபைகளும், ‘நான் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் அறிந்துள்ளவர்’ என்பதை அறிவார்கள். உங்களில் ஒவ்வொருவருக்கும் உங்கள் செயல்களுக்கு ஏற்றபலன் தருவேன்.
௨௪ “ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். ௨௫ நான் வருகிறவரை இதனையே தொடர்ந்து செய்துவாருங்கள்.
௨௬ “இதில் இறுதிவரை இதுபோல் இருந்து வெற்றி பெறுகிறவர்களுக்கு மற்ற தேசங்களின் மேல் நான் அதிகாரத்தைக் கொடுப்பேன்.”
௨௭ “ ‘அவன் அவர்களை இரும்புக் கோலால் ஆள்வான்.
மண்பாண்டங்களைப்போல் தூள்தூளாக அவர்களை நொறுக்குவான்.’ சங்கீதம் 2:9
௨௮ “என் பிதாவிடமிருந்து இந்த வல்லமையை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்.” ௨௯ சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.