யோவான் எழுதின நற்செய்தி
1
வார்த்தை மனிதனாகியது
ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது. அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார். அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை. அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது. அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான். தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான். அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான்.
உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம். 10 அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை. 11 அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். 13 இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
14 வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர்.
15 யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.” 16 அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம். 17 ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது. 18 இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார்.
யோவான் ஸ்நானகன்
19 எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள்* 1:19 மூல மொழியில் யூதர்கள் என்றுள்ளது. யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே: 20 “நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான்.
21 அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள்.
அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான்.
தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள்.
அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
22 இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள்.
23 யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் 1:23 ஏசா. 40:3 என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான்.
24 பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர் 25 யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
26 யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள். 27 அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான்.
28 இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
இயேசு இறைவனின் ஆட்டுக்குட்டி
29 மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர். 30 ‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன். 31 நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான்.
32 பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன். 33 தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார். 34 இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் 1:34 இறைவனின் மகன் என்பது பல கையெழுத்துப் பிரதிகளில் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் என்றுள்ளது. ஏசா. 42:1 –ஐ பார்க்கவும். என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
இயேசுவின் முதல் சீடர்கள்
35 மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். 36 இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
37 அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள். 38 இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார்.
அதற்கு அவர்கள், “போதகரே§ 1:38 போதகரே என்பதை மூல மொழியில் ரபீ என்பார்கள்., நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
39 இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார்.
எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.
40 யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன். 41 அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். 42 அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான்.
இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும்.
பிலிப்புவும் நாத்தான்யேலும் அழைக்கப்படுதல்
43 மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
44 அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன். 45 பின்பு பிலிப்பு நாத்தான்யேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.
46 நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான்.
அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
47 அப்படியே நாத்தான்யேலும், தன்னை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக்குறித்து, “இவன் ஒரு உண்மையான இஸ்ரயேலன், கபடம் ஏதுமில்லாதவன்” என்றார்.
48 அப்பொழுது நாத்தான்யேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.
49 அப்பொழுது நாத்தான்யேல், “போதகரே, நீரே இறைவனின் மகன்; நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.
50 அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்குச் சொன்னதினாலேயா நீ என்னை விசுவாசிக்கிறாய்? நீ இதைப் பார்க்கிலும் பெரிதான காரியங்களைக் காண்பாய்” என்றார். 51 அவர் தொடர்ந்து சொன்னதாவது, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், பரலோகம் திறந்திருக்கிறதையும், இறைவனுடைய தூதர்கள் மானிடமகனாகிய என்னிடத்திலிருந்து மேலே போவதையும், இறங்கி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்”* 1:51 ஆதி. 28:12 என்றார்.

*1:19 1:19 மூல மொழியில் யூதர்கள் என்றுள்ளது.

1:23 1:23 ஏசா. 40:3

1:34 1:34 இறைவனின் மகன் என்பது பல கையெழுத்துப் பிரதிகளில் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் என்றுள்ளது. ஏசா. 42:1 –ஐ பார்க்கவும்.

§1:38 1:38 போதகரே என்பதை மூல மொழியில் ரபீ என்பார்கள்.

*1:51 1:51 ஆதி. 28:12